சிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா.? மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி

3
1063

படேல் சிலையை விடப் பெரிதாக அம்பேத்கர் சிலையை அமைக்க பணம் வைத்திருக்கும் அரசிடம் ஏழைகளுக்காகச் செலவிட பணம் இல்லையா என மும்பை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

மும்பை பரேலில் உள்ள நிவ்ரோஜி வாடியா மகப்பேறு மருத்துவமனை மற்றும் பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவைக்கு மாநில அரசு சார்பில் முறையே 50 சதவீதம் மற்றும் 85 சதவீதம் நிதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என குறைகூறப்படுகிறது.

இச்சூழலில் இரு மருத்துவமனைகளுக்கும் போதிய நிதி ஒதுக்க உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வாடியா மருத்துவமனைக்கு மாநில நிதித்துறை 24 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்தொகை மூன்று வாரங்களில் வழங்கப்பட்டுவிடும்” என்றார்.

பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனைக்கும் 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரசின் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், “இது வெறும் கண்துடைப்பு. இது மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படும். ஒதுக்கிய தொகையை வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

“இந்த அரசு அம்பேத்கர் சிலை படேல் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதற்குத் தேவையான பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கர் யாருக்காக பாடுபட்டாரோ அவர்கள் மட்டும் சாக வேண்டுமா?” என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

“ஏழைகளும் நடுத்தரக் வர்த்தினரும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வசதி இல்லாதவர்கள். நோய்வாய்ப்பட்ட அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது முக்கியமா? சிலை அமைப்பது முக்கியமா? அரசு பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. முதல்வர் பாலங்களை திறப்பதில்தான் மும்முரமாக இருக்கின்றார்” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிர அரசு புதன்கிழமை 1070 கோடி ரூபாய் செலவில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது

3 COMMENTS

 1. கஞ்சிக்கு வழியில்லாமல் பல்லாயிரம்
  மக்கள் விழி பிதுங்கி வீதியில் இருக்கும்போது,செத்துப்போன
  தலைவர்கட்கு பல்லாயிரம் கோடியில்
  சிலை செய்து பெருமை கொள்வது
  நமது நாடும் அதை வழி நடத்தும் அரசும்.
  வாழ்க நம் நாடு.

 2. புபுரட்சியாளர் அம்பேத்கருக்கு சிலை அமைக்கும் போது தான் நீதிபதிகளுக்கு பொது மக்களை பற்றி அக்கறையே வரும். படேலுக்கு சிலைக்கு சிலை அமைக்கு எந்த நீதிபதியாவது கேட்டார்களா?

Comments are closed.