நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை – சென்னை உயர்நீதிமன்றம்

0
139

நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை!
ஆக்கிரமிப்பில் இருந்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது, அரசு அதிகாரிகளின் கடமை’ என, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.


சென்னையைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் தாக்கல் செய்த மனு:
ஈஞ்சம்பாக்கத்தில், 27 நீர் நிலைகள் இருந்தன. கணக்கன் மானிய குளம்; உப்பு கேணி கசம்; தட்டான் கேணி குளம் என, இந்தப் பகுதியில் நீர் நிலைகள் இருந்தன.
ஆக்கிரமிப்புகளால், இந்த நீர் நிலைகள் எல்லாம் மாயமாகி விட்டன.


நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டதால், மழை காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது.
ஈஞ்சம்பாக்கத்தில் மாயமான, 27 நீர் நிலைகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜரானார்.
விசாரணைக்கு பின், மாயமான நீர் நிலைகளை மீட்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளை அணுகலாம் என்று அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


இவ்வழக்கில் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:


நுரையீரல் எவ்வளவு முக்கியமோ, அதுபோல நீர் நிலைகள் வாழ்வாதாரத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்து, அதிகாரிகள் அவற்றை பாதுகாக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆக்கிரமிக்கப்படாமல் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது, அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கடமை.
அரசு நிலங்களும் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


அரசு நிலங்கள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில், அரசியல் உள்ளிட்ட எந்த காரணங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை, தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கும்படி, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.