ஒரு வாய் சோற்றுக்கு கையேந்தும் நிலை : விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து.?

0
10

“விவசாயிகள் மசோதா – கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம். முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள். அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள். இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும் பறிபோகிறது..!
ஜெயரஞ்சன் சொல்வதைப் போல இது பிரம்மாண்டமான கார்ப்பரேட்டுகளுக்கு நேரடிக் கூலிகளாக விவசாயிகளை மாற்றப் போகிறது. இனி எந்த மாநிலத்தில் எந்த உணவுப்பொருளின் விலையையும் அந்த மாநிலமல்ல, இந்த சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளின் வியாபார காந்தங்களே தீர்மானிப்பர். இந்த நிறுவனங்களே கதியென ஆகிய பின்னர் இவர்கள் விலையை சரியான நேரத்தில் தரவில்லை எனில் விவசாயிகளுக்கு அரசிடம் உதவி கோர முடியாது. மத்தியஸ்த இடத்தில் மாநில அரசு இருக்காது. அதை ஒரு அம்பானியோ அதானியோ தான் தீர்மானிப்பார். உணவுப்பொருட்களை மொத்தமாய் வாங்கி பதுக்குகிற பணியை ஒரு பெரிய கார்ப்பரேட் செய்தால் பின்னர் அதன் விளைவு எவ்வளவு பெரியதாக இருக்கும்?


அது மட்டுமல்ல, ஒரு மாநில மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களை விடுத்து எவற்றினால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கூடுதல் லாபம் வருமே அதை மட்டுமே அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் பயிரிடும் கட்டாயத்துக்கு ஆட்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதை எப்படி புரிந்து கொள்ளலாம்?


இதை ஒரு உதாரணம் மூலமாகவும் விளக்குகிறார் அபிலாஷ். “அவகடோ எனும் பழம் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ, சிலே போன்ற நாடுகளில் இருந்து பெருமளவுக்கு ஏற்றுமதியாகின. இதற்குத் தோதாக அவகடோ எடைக்குறைப்புக்கு ஏற்ற பழம் என ஒரு கதை பரப்பட்டது. விளைவாக இதன் தேவையும் விலையும் கன்னாபின்னாவென ஏறியது. மெக்ஸிகா, சிலேவில் பாரம்பரிய விவசாயம் கைவிடப்பட்டு, எங்கு பார்த்தாலும் அவகடோ பயிரிட்டார்கள். இந்த அவகடோவைப் பயிரிடுவதற்கு ஒருநாளைக்கு அங்கே 9.5 பில்லியன் நீரை பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த நாடுகளில் சூழல் சீரழிந்து, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. எல்லா நதிகளும் வற்றி விட்டன. வெப்பம் அதிகமாகி அடிக்கடி புயல்மழை வரத் தொடங்கியது” என குறிப்பிட்டுள்ளார்.கார்ப்பரேட் விவசாய சூழல்!


இதன் பின்னுள்ள அரசியல் விவசாயிகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. “மக்களால் எதிர்க்க முடியாதபடிக்கு கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் கட்டுப்படுத்துகின்றன. அரசு எதிலும் தலையிடாமல் முதலாளிகளிடம் கட்டிங் வாங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அத்தகைய நிலைதான் இந்தியாவிலும் இனி கார்ப்பரேட் விவசாயச் சூழலில் ஏற்படும். ஒரு மாநிலத்தின் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருளை இனி பயிரிட முடியாது. இதுவரை எளிதில் வாங்கி சாப்பிட்டவை இனி கிடைக்காது. இங்கு உற்பத்தி ஆகிற பொருட்கள் வெளியே அனுப்பப்படுவதால் அதுவும் நமக்குக் கிடைக்காது. ஒவ்வொரு மாநிலத்தையும் தம் வியாபார இலக்குக்கான ஒரு சோதனைக் களமாக அம்பானி, அதானிகள் மாற்றுவார்கள்” என்று தனது பதிவில் அபிலாஷ் கூறியுள்ளார்..!


மக்கள் தலையிலேயே விழும் ஆபத்து!

“இந்த நிறுவனங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்குமென்பதால் வாங்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்வார்கள்; முதலில் நல்ல விலைக்கு வாங்கி மொத்த சந்தையையும் இடைத்தரக வர்த்தகர்களிடம் இருந்து பறித்து விட்டு தாம் மட்டுமே ஒரே போக்கிடம் எனும் நிலையை உருவாக்கிய பின்னர் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள் – வெங்காயத்தை அதானி / அம்பானி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதிக விற்பதாய் முடிவெடுத்தால் விவசாயிகளால் அவரை எதிர்த்து யாரிடம் போக முடியும்? மாநில அரசால் அதை எதிர்க்க முடியுமா? வழக்காடு மன்றம் தான் செல்ல முடியும். ஆனால் அங்குள்ள ரப்பர்-முதுகு சங்கி நீதிபதிகள் என்ன பதிலளிப்பார்கள் எனத் தெரியாதா?


அதிகாரம் அதானி , அம்பானி கையில்!

ஒருமுறை மடியை அவிழ்த்து சரணடைந்து விட்டால் பின்னர் வேறெந்த பெரிய நிறுவனமும் விவசாயிகளுக்கு கூடுதல் விலையைத் தர மாட்டார்கள். சிறுவணிகர்களோ வேறு வர்த்தகத்துக்கு பெயர்ந்திருப்பார்கள். கசாப்புக்கு அனுப்பப்பட்ட மாட்டின் நிலைதான் நம் விவசாயிகளுக்கும் ஏற்படும். பேரம் பேசுவது போக ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்க முடியாது.


எந்த மாநிலத்திலும் யாரும் உணவுப்பொருட்களை வாங்கி விற்கலாம் என திறந்த சந்தை உருவானால் போட்டி ஏற்படும், போட்டிச்சூழலில் விவசாயிக்கு கூடுதல் லாபம் வரும் என்பது பச்சைப் பொய். இன்றைய நவதாராளவாதச் சூழலில் போட்டியென்பது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும், பின்னர் ஒரே விலை தான்.

அதுமட்டுமல்ல, அரசு இதுவரை விவசாயிகளுக்கு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதார விலையும் மெல்ல மெல்ல கைவிடப்படும். நீங்களாச்சு அம்பானி/அதானியாச்சு என அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்” என்றும் அபிலாஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.