பொள்ளாச்சி ஆசிரியருக்கு சமூக நாயகன் விருது – உதவும் இதயங்கள் அறக்கட்டளை விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது

0
8

பொள்ளாச்சி ஆசிரியருக்கு
சமூக நாயகன் விருது

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கொண்டே கவுண்டன் பாளையம் என்னும் கிராமத்தைச் சார்ந்த பொ.மோகன்ராஜ் என்பவர் நெகமம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இவர் ஊரடங்கினால் ஏழை ஏளிய மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க தனது சொந்த முயற்சியில் சமூக சேவையாற்றும் நோக்கில் தனி இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆன்டிராய்டு மொபைல் செயலிகளை உருவாக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு கற்றல் கற்பித்தல் சார்ந்த தகவல்தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் ஆங்கில இலக்கண பாடப்பகுதிகள் போன்றவற்றை நாள்தோறும் வழங்கி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்

இதுமட்டுமின்றி விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசத் தலைவர்களின் பிறந்தநாள் அன்று ஆன்லைனில் வினாடிவினாப் போட்டி களை நடத்தி அதில் வெற்றி பெறும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி அவர்களைப் பாராட்டி வருகிறார்இந்திய நாட்டின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இவரது சமூக சேவையைப் பாராட்டி புதுக்கோட்டை உதவும் இதயங்கள் அறக்கட்டளை இவருக்கு
சமூக நாயகன் என்ற விருதினை வழங்கி இவரைக் கௌரவப்படுத்தியுள்ளது.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி ஏற்கனவே பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இவருக்கு கல்விரத்னா விருது, அப்துல்கலாமின் கனவு ஆசிரியர் விருது,ஆசிரியச்சிற்பி விருது,அறிவுமாமணி விருது,அறிவுச்சுடர் காந்தி விருது போன்ற விருதுகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .