இந்தியாதமிழ்நாடுபாஜக - BJPபுதுச்சேரி

பாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் கொலை உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய காரைக்கால் பெண் தாதா எழிலரசி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றான காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு (எ) ராதாகிருஷ்ணனுக்கு வினோதா, எழிலரசி என இரண்டு மனைவிகள். 2013-ம் ஆண்டு கூலிப் படையினரால் ராமு படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமாரும்தான் காரணம் என்று நினைத்தார் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி.



எழிலரசி
தொடர்ந்து ராமுவின் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அய்யப்பன் மற்றும் ராமுவின் முதல் மனைவி வினோதா ஆகியோர் 2015-ம் ஆண்டும், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் 2017-ம் ஆண்டும் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி, பிறகு ஜாமீனில் வெளிவந்த எழிலரசி, 2018-ம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
அதையடுத்து ஜாமீனில் வெளிவந்த அவர், காரைக்கால் நேதாஜி நகரில் வசித்துவந்தார். கடந்த ஆண்டு, ஜனவரி 23-ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று கருதி அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது சிறையிலிருந்து வெளிவந்த அவர், நேற்று புதுச்சேரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் கட்சியில் இணைந்தார். `தற்போது நிரவி திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.ஆர்.ஆர் பேரவை நிறுவனராகவும், சமூக சேவகியாகவும் இருக்கும் எழிலரசி, பா.ஜ.க உறுப்பினராக இணைந்திருக்கிறார்’ என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். மேலும், `புதுச்சேரியில் இருக்கும் வேறு எந்தக் கட்சியிலும் ரௌடிகள், கொலைக் குற்றவாளிகள், கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இல்லையா?’ என்றும் கேள்வி எழுப்புகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

Related Articles

Back to top button