இந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு? – காங்கிரஸ் கேள்வி

0
15

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தபிர் கவோ, “அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் 100 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு முதல், இந்தக் கிராமத்தில் சிறிய வணிக வளாகம், சாலைகள் போன்றவற்றை கட்டிவருகிறது” என்று கூறியிருந்தார்.

பூட்டான் எல்லையில் சீனா உருவாக்கிய புத்தம் புதிய கிராமம் – என்ன நடக்கிறது?

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


அதில், “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தபிர் கவோ, அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவுக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் சீனா 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். அந்தக் கிராமத்தில் வணிக வளாகமும், சாலையும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று உண்மையாக இருந்தால், சர்ச்சைக்குரிய பகுதியை மீறி, அங்கு நிரந்தரமாக சீன மக்களை அந்த ராணுவம் குடியமர்த்த முயல்வது தெளிவாகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

சீனா: கட்டாய உழைப்பில் 5 லட்சம் உய்குர் இஸ்லாமியர்கள்

மேலும், “இந்த சர்ச்சைகள் குறித்து மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது? சீனாவுக்கு மற்றொரு நற்சான்று அளிக்கப்போகிறதா மத்திய அரசு அல்லது, குழப்பமான விளக்கத்தை அளித்து கடந்த கால அரசுகள் மீது பழி சுமத்தப்போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ”அவரின் (பிரதமர் மோடி) வாக்குறுதியை நினைவு கூறுங்கள் -‘நாட்டை தலை குனிய விடமாட்டோம்’.” என்று குறிப்பிட்டு, சீன கிராமத்தைப் பற்றிய செய்தி துணுக்கை பகிர்ந்துள்ளார்.


சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர் செய்ய மோடி முடிவு : உ.பி பாஜக தலைவர்

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி ஜீ.. எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், அத்துடன் சீன கிராமத்தை பற்றிய செய்தி துணுக்குகளை பகிர்ந்துள்ளார்.