பலத்த மழையால் வீடு இடிந்தது: கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர் – ராமநாதபுரத்தில் பரிதாபம்

0
10

பலத்த மழையால் வீடு இடிந்தது: கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர் – ராமநாதபுரத்தில் பரிதாபம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான தூறல் மழை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாகவும் அதன்பின்னர் லேசான மழையாகவும் பெய்தது. இந்த மழையால் ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஒரு வீட்டினை மூன்றாக பிரித்து 3 குடும்பங்கள் வசித்து வந்தனர்.


இந்த வீட்டில் வசித்து வந்த சண்முகராஜ் (வயது 24) என்பவர் சுமைதூக்கும் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் ஓய்வு நேரத்தில் டிரம்ஸ் வாசிக்க சென்றுவருவாராம். இவ்வாறு நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ஸ் செட் வாசித்துவிட்டு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.


தூங்குவதற்கு தொடங்கிய வேளையில் பலத்த மழை காரணமாக வீட்டின் ஒரு பகுதி லேசாக சரியத்தொடங்கியது. இதனைக் கண்ட சண்முகராஜ் மற்றும் அருகில் மற்றொரு வீட்டில் இருந்த அவரது அண்ணன் நாகராஜ் (26) ஆகியோர் சத்தமிட்டு வீட்டில் இருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.


அப்போது சண்முகராஜ் தனது 4 மாத கர்ப்பிணி மனைவியான சங்கீதாவை (19) பத்திரமாக வெளியே கொண்டு சென்று விட முயன்றார். அப்போது வீடு இடிய தொடங்கியது. இதனை எதிர்பாராத சண்முகராஜ் மனைவியையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணி உடனடியாக மனைவியை வெளியே தள்ளிவிட்டார். அதற்குள் சண்முகராஜ் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்து அமுக்கியது.


வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த சண்முகராஜின் உறவினர் மூர்த்தி வெளியே வர முயன்றபோது அவரின் நாய் உள்ளே சிக்கியதை அறிந்து அதனை மீட்டு கொண்டுவர முயன்றார். அப்போது அவரின் மீதும் இடிபாடுகள் விழுந்தது. இதில் மூர்த்தி நாயுடன் சேர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கினார். இதனை கண்டவர்கள் கூச்சலிட்டவாறு ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது சண்முகராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மூர்த்தி தனது நாயை கட்டிப்பிடித்தவாறு அசைவின்றி வலியால் துடித்து கிடந்தார்.


உடனடியாக சண்முகராஜ் மற்றும் மூர்த்தியை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். செல்லும் வழியில் சண்முகராஜ் பரிதாபமாக இறந்துபோனார். மூர்த்தியை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்தில் நாகராஜின் மனைவி தாயம்மாள் (வயது 23), அவரின் குழந்தைகள் முத்தரசு (1) , சுவந்தர் (2) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தன்னை காப்பாற்ற வெளியே தள்ளி விட்டு தனது உயிரை விட்ட சண்முகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. நாயின் உயிரை காப்பாற்ற போய் நாயுடன் சேர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய மூர்த்திக்கு இன்னும் திருமணமாக வில்லை. 3 குடியிருப்புகளை கொண்ட ஓட்டு வீடு முழுமையாக இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் இருந்த பொருட்கள், மின்விசிறிகள், டி.வி. உள்ளிட்ட அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கிபோயின. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தினால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.


சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 3 வீடுகளில் ஒரு வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றுவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பலியான சண்முகராஜ் மற்றும் காயமடைந்த மூர்த்தி குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.