22 வருட உயர்வை தொடும் வாராக் கடன், ஆபத்தில் இருக்கும் இந்திய வங்கிகள்

0
39

இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாகவே கடுமையான வர்த்தகப் பாதிப்புகளால் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக 6 மாத கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதற்குச் சலுகை அளிக்கப்பட்டது.
கடன் சலுகையாலும், லாக்டவுன் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்த நிறுவனங்கள் கடனை செலுத்த முடியாமல் தொடர்ந்து தடுமாறித் தவித்து வருகிறது.
இதனால் 2021ல் ஆண்டில் 2020ஆம் ஆண்டை விடவும் வாராக் கடன் அளவு இருமடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வாராக் கடன் உயர்வு
2020 செப்டம்பர் மாதம் இந்திய வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக் கடன் அளவு 7.5 சதவீதமாக இருந்தது, இது 2021 செப்டம்பர் மாதம் 14.8 சதவீதம் வரையில் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது என ரிசர்வ் வங்கியின் ஸ்டிரெஸ் டெஸ்ட் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள்
இந்த 14.8 சதவீத வாராக் கடனில் பெரும் பகுதி நாட்டின் பணப் புழக்கத்திற்கும் நிதி சேவைக்கும் அஸ்திவாரமாக இருக்கும் பொதுத்துறை வங்கியினுடையதாக இருக்கும் எனவும் இந்த ஆய்வுகள் கூறுகிறது. ஏற்கனவே மோசமான நிதி
நிலையில் இருக்கும் வங்கிகளை வலிமையான வங்கிகளுடன் இணைத்துவிட்ட நிலையில் தற்போது வாராக் கடன் உயர்வு புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ‘worst is behind us’ என்று வாராக் கடன் பிரச்சனையைக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் வாராக் கடன் பிரச்சனை இந்தியாவைப் போல் உலகில் பல நாடுகள் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாராக் கடன் கணிப்புகள்
இந்தியப் பொதுத்துறை வங்கியின் வாராக் கடன் அளவு செப்டம்பர் 2020ல் 9.7 சதவீதமாக இருந்து நிலையில் 2021 செப்டம்பரில் 16.2 சதவீதமாக உயர உள்ளது. இதேபோல் தனியார் வங்கிகளின் வாராக் கடன் அளவு 2.5 சதவீதத்தில் 4.6 சதவீதமாக உயரும் என்றும், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் வாராக் கடன் அளவு 5.4 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக உயர உள்ளது.

முக்கியத் துறைகள் பாதிப்பு
இந்தத் திடீர் வாராக் கடன் உயர்வுக்கு முக்கியக் காரணமாக லாக்டவுன் காலத்தில் சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி, கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல் மற்றும் ரீடைல் துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வர்த்தகப் பாதிப்பு தான் முக்கியக் காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகிறது.
இந்த வாராக் கடன் பாதிப்பால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.