டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் SDPI கட்சியினர் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம்

0
6

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..!

ரிசர்வ் வங்கி முற்றுகை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 43 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்..!அந்த வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் சென்னையில் நேற்று ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், வடசென்னை மாவட்ட தலைவர் முகமது ரசீத், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா, தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்களும் அதிக அளவில் பங்கேற்றனர்..!

சாலை மறியல்
ரிசர்வ வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து ஒரு அணியினர் பேரணியாக புறப்பட்டு வந்தனர். அதே நேரத்தில் என்.எஸ்.சி.போஸ் சாலையில் இருந்து ஒரு அணியினர் பாரி முனை நோக்கி வந்தனர். 2 அணியினரும், ராஜாஜி சாலை-என்.எஸ்.சி.போஸ் சாலை சந்திப்பில் வரும்போது அவர்களை போலீசார் வழி மறித்தனர். போராட்டக்காரர்கள் 2 சாலை சந்திப்பிலும் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ½ மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..!

அதைத் தொடர்ந்து, போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து புதுச்சூரங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தனர்..!

போராட்டம் வெற்றி பெறும்
போராட்டத்தின் போது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், என்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர், இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், நிச்சயம் இந்தி திணிப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறும். அதற்கு உறுதுணையாக எஸ்.டி.பி.ஐ. கட்சி களத்தில் நிற்கும்” என்றார்..!