ஒருவர் கூட சிகிச்சை பெறாத ரயில்பெட்டி கொரோனா வார்டுகள் : சுமார் ரூ.950 கோடியை வீணாக்கிய மத்திய அரசு

0
7

சென்னை : ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுகிறோம் என கூறி சுமார் ரூ. 950 கோடி வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது..! கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸின் பாதிப்பு அதிக அளவில் இருந்ததாலும், இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே இருந்ததாலும் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியது..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை அடுத்து மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இனைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் மிகவும் புதுமையான ஒன்று என கருதப்பட்ட, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ரயில் பெட்டிகளை பயன்படுத்துவது..!கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சையளிக்க முதற்கட்டமாக 5,231 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டது. அதன்படி ரயில் பெட்டிகளை தனிமை வார்டாக மாற்ற சுமார் ரூ.2 லட்சம் செலவாகும், அதனை மறுசீரமைப்பு செலவு சுமார் 1 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.5000 கோடி ஒதுக்கி, அதில் முதற்கட்டமாக ரூ.950 கோடியை செலவிட்டதாக தகவல் வெளியானது..!

ஆனால் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் இதுவரை யாரும் சிகிச்சை பெற்றதாக தெரியவில்லை. இந்நிலையில் மீண்டும் 100% ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை பயணிகள் சேவைக்காக மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று சரியான தொலைநோக்கு பார்வை இல்லாமல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது..!