பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, குழந்தையை பெற்றெடுத்து உயிரிழந்த சோகம்

0
12

தேனி : பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அச்சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகள் வழி பேத்தி (17 வயது சிறுமி) பெற்றோர் இல்லாமல் தாத்தா அன்பழகனின் வளர்ப்பில் வளர்ந்து வந்துள்ளார். நர்சிங் படிப்பிற்காக கரூர் சென்ற அவர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே சொந்த ஊரான நாகலாபுரத்தில் உள்ள கார்த்திக் என்பவருடன் சிறுமி பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சிறுமி வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது அவரது தாத்தா பாட்டிக்கு தெரிய வந்தது..!


இதனையடுத்து 8 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை நேற்று போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது தாத்தா அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தொடர்ந்து ரத்தக் கசிவு நிற்காததால் இன்று சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிறுமியின் தாத்தா, கார்த்திக், மணிகண்டன் என்பவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்..!புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்திய காவலரிடம் இறுதி வரை தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சிறுமி கூறவில்லை என போடி டிஎஸ்பி பார்த்திபன் கூறினார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் டி.என்.ஏ சோதனை செய்யப்பட்டு குற்றவாளி கண்டறியப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது..!
இது குறித்து சிறுமியின் தாய் மாமா ஜோதி முருகன் கூறும்போது “கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் மீது தான் சந்தேகம் இருக்கிறது. அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்..!