உ.பி.யில் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு: சக மாணவனை சுட்டுக்கொன்ற 10 ஆம் வகுப்பு சிறுவன்

0
9

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் எந்த இடத்தில் அமர்வது என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் சக மாணவனை 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
10-ம் வகுப்பு பயிலும் இரு மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் எந்த இடத்தில் அமர்வது என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர் வீடு திரும்பியதும் தனது மாமாவின் ரிவால்வர் துப்பாக்கியை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டுள்ளார். இன்று வகுப்பறைக்கு வந்தவுடன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு தன்னுடன் மோதலில் ஈடுபட்ட மாணவரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரும் தப்பி ஓடாமல் நின்றதால் சிக்கிக் கொண்டார்.


இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் வகுப்பறை துப்பாக்கிச் சூடு பரவலாகக் காணப்படும் நிலையில், உத்தரப் பிரதேசம் வரை இத்தகையை அபாயகரமான கலாச்சாரம் ஊடுருவுவது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.