கத்தியை காட்டி மிரட்டி Google pay மூலம் பணம் பறித்த 8 பேர் கைது

0
7

சென்னை தரமணி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு Google pay மூலம் பணம் பறித்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ராஜா (40), என்பவர் கடந்த 26ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்னை தரமணி ரயில் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து 3000 ரூபாய் பணம் மற்றும் வாட்ச் முதலியவற்றை பறித்துக் கொண்டனர்.


அதோடு Google pay அப்ளிகேஷன் மூலம் வங்கி பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி அதில் இருந்து மேலும் இரண்டாயிரம் ரூபாயை மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராஜா, தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.


இந்நிலையில், பணம் மாற்றப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தரமணியை சேர்ந்த பாலமுருகன் (20), விக்கி (எ) விக்னேஷ் (21), பிரகாஷ் (21), சந்தோஷ் குமார் (19), கார்த்திக் (25), தினேஷ் (23), அருணாசலம் (19), எழுமலை (20), ஆகிய 8 நபர்களை போலீசார் கைது செய்தனர்.


மேலும் அவர்களிடம் இருந்து வாட்ச் மற்றும் 1000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.