உ.பி.யில் நடுரோட்டில் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை : சம்பவத்தை கண்டும் காணாதது போல் சென்ற மனிதநேயமற்ற மக்கள்

0
49

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடுரோட்டில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதை பொதுமக்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் நகரம் லோனியின் அங்கூர் விஹார் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் (23) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் ஷர்மா(21) என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ளது. கோவிந்த் ஷர்மா தனது நண்பர் அமித் குமாருடன் சேர்ந்து அஜய் குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

சாலையில் சென்றவர்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், தாக்குதல் வீடியோ வைரலானது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு (கிராமப்புற) ஈராஜ் ராஜா கூறுகையில்,கோவிந்த் பல ஆண்டுகளாக லோனி கோவிலுக்கு வெளியே பூக்கடை நடத்தி வந்துள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்பு அஜய் தனது கடையை அதே கோவிலுக்கு வெளியே திறந்ததால், கோவிந்தின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்த், தனது நண்பருடன் அஜய் குமாரை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளார்.அஜய் தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்புவதற்காக ஆட்டோவில் ஏறியபோது, அவரை தரதரவென இழுத்துச் சென்று கோவிந்தும் அவரது நண்பரும் இரும்பு கம்பியால் அஜயை சரமாரியாக தாக்கி கொன்றுள்ளனர். என்றார்.