பாஜகவினர் மீது கல்வீசியதாக கூறி பெண்ணின் வீடு ஜேசிபி மூலம் இடிப்பு

0
32

பாஜக நகர நிர்வாகம் ஏழை பெண் வாடகைக்கு இருந்த வீட்டை இடித்ததால் சர்ச்சை


 மத்திய பிரதேச மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதாக கூறி, பாஜகவினர் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறி ஒரு பெண்ணை கைது செய்த காவல்துறையினர், அவர் குடியிருந்த வீட்டையும், இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 உஜ்ஜைனில் உள்ள பேகம்பாக் பகுதியில் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கேட்டு, ஊர்வலம் நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பேகம்பாக் பகுதியில் ஊர்வலம் செல்லும் போது, வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, பாஜகவினர் மீது செங்கல் உள்ளிட்ட ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளன. இதில் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி அப்பகுதியினரை காவல்துறையினர் விரட்டியடித்துள்ளனர். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பெண் ஆவார். பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த உஜ்ஜைன் நகராட்சி அதிகாரிகள், அந்த பெண் குடியிருந்த 2 வீடுகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துள்ளனர்.


பாஜக நகராட்சி நிர்வாகத்தின் இந்தச் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், அந்த பெண் குடியிருந்த 2 வீடுகளும், வாடகைக் கட்டிடம் என தெரியவந்துள்ளது. இதில் ஒரு வீட்டின் உரிமையாளர் பெயர், திக்கா ராம் என்பதும், மற்றொரு வீட்டு உரிமையாளரின் பெயர் ஹமீது என்பதும் தெரியவந்துள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிரிமினல்கள் உடனடியாக வெளியேறி விடுங்கள், இல்லாவிட்டால், 10 அடிக்கு குழி தோண்டி புதைத்து விடுவேன், என மத்திய பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகாண் அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, பாஜகவினருக்கு எதிராக செயல்பட்ட, பெண்ணின் வீடு இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.