உ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது

0
104

லக்னோ: தனது முன்னாள் வகுப்பு தோழியுடன் நடந்து சென்ற முஸ்லீம் இளைஞர் ஒருவர் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு இந்து பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்தினர் திருமணம் செய்வதைத் தடுக்கும் வகையில் லவ் ஜிகாத் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், 16 வயது சிறுமியுடன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 18 வயதே நிரம்பிய இஸ்லாமிய இளைஞர் மீது லவ் ஜிகாத் சட்டம் பாய்ந்துள்ளது.
கொரோனா முடிவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி…. விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு

சிறுமி மறுப்பு
இருப்பினும், ‘லவ் ஜிஹாத்’குற்றச்சாட்டுகளை 16 வயதான அந்த தலித் சிறுமி முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், ‘அவர் தனது நண்பர். இதை நான் ஏற்கனவே நீதிபதியிடம் சொல்லியிருக்கிறேன். எங்குக் கேட்டாலும் இதையேதான் நான் கூறுவேன். எனது நண்பருடன் நான் சாலையில் நடப்பதும் இங்குச் சிலருக்குப் பிரச்சினையாக இருக்கிறது. என்னைப் பற்றி போலியான வீடியோக்களை உருவாக்கி, இப்போது அதை லவ் ஜிஹாத் என்று அழைக்கிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எனது சொந்த விருப்பப்படி சென்றேன்’ என்றார்.

லவ் ஜிகாத் சட்டத்தில் கைது
அந்த இஸ்லாமிய நபர் டிசம்பர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி / எஸ்டி வன்கொடுமை சட்டம், போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழும் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலேயே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


தந்தை மறுப்பு
இருப்பினும், அந்தச் சிறுமியின் தந்தை தான் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ‘நான் என் மகளை முழுமையாக நம்புகிறேன். அவள் என்ன தவறு செய்தாள்? ஒரு பையனும் பெண்ணும் சாலையில் ஒன்றாக நடப்பதுகூட இப்போது சட்டவிரோதமா? ‘ என்று ஆவேசமாகக் கூறினார்.

நடந்தது என்ன?
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி இருவரும் ஒரு நண்பரின் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் இரவு 10 மணியளவில், இருவரும் அச்சிறுமியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சில வலதுசாரி இந்து குழு அவர்களைத் துரத்தி தடிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்ததும், அந்தக் குழு அவர்களைக் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


மைனர் சிறுவன்
கைது செய்யப்பட்டவர் டெஹ்ராடூனில் வெல்டர் பயிற்சியாளராக பணியிலிருந்துள்ளார். அவர் தற்போது ஒரு வாரமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 18 வயது என்று போலீசார் கூறுகின்றனர், ஆனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு 17 வயது என்று கூறுகிறார்கள். இருப்பினும், வயதை நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

போலீஸ் விளக்கம்
இது குறித்துக் காவல் நிலைய இன்சார்ஜ் அருண் குமார் கூறுகையில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மைனராக இருந்தால், அதை நிரூபிக்க ஆவணங்கள் வேண்டும். சிறுமியை விசாரித்தபின், அவரது தந்தையின் புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். மேலும், பிஜ்னோர் போலீஸ் தனது ட்விட்டரில், ‘அச்சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று பதிவிட்டுள்ளது