முதல்ல GST நிலுவை பணத்தை கொடுங்க, அப்புறம் எங்களை குறை சொல்லுங்க – மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

0
10

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியையாவது உடனே விடுவிக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார்.நாட்டின் 9 கோடி விவசாய குடும்பங்களுக்கு இன்று ரூ.18,000 கோடியை வழங்கிப் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார்.


மத்திய அரசு அரசியல் லாபங்களுக்காக எங்கள் மீது தீங்கிழைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி அரைகுறை உண்மையுடனும், சிதைந்த உண்மைகளுடன் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகிறார். பிரதமர் மோடியின் பேச்சு தூய அரசியல் தோரணையாகும்.

நாங்கள் மத்திய அரசின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இப்படி இருக்கையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஒரு திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்ற கேள்வி அபத்தமானது.
விவசாயிகளின் நலனுக்காக மேற்கு வங்கம் மத்திய அரசுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளேன், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியிருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.

ரூ.8,000 கோடி செலுத்தப்படாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உள்ளடக்கிய ரூ.85,000 கோடி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை கூட அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அவர் (மோடி) உண்மையிலேயே மாநிலத்திற்கு உதவ விரும்பினால், அவர் இந்த நிதியில் ஒரு பகுதியையாவது விடுவிக்க வேண்டும் எங்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.