டூவீலர் மோதி மூச்சடைத்து விழுந்த குட்டி யானை – சிபிஆர் செய்து காப்பாற்றிய தன்னார்வலர்

0
6

டூவீலர் மோதியதில் மூச்சடைத்து விழுந்த குட்டி யானையை சிபிஆர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் சாந்தபுரி மாகாணத்தில் இரவு நேரத்தில் யானைக்குட்டி ஒன்று சாலையை கடக்க முயற்சித்துள்ளது. அந்நேரத்தில் வேகமாக வந்த டூவீலர் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த குட்டி யானை மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவரும் யானைக் குட்டியும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். லேசாக காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் யானை ஆனது சாலையில் மயக்க நிலையில் மூச்சடைத்து அசைவற்றுக் கிடந்தது. இதையடுத்து காயமடைந்த வனவிலங்குகளை மீட்பதில் அனுபவம் வாய்ந்த மன ஸ்ரீவேட் என்பவர் நிகழ்விடத்திற்கு அழைக்கப்பட்டார்.
யானைக் குட்டி மயக்கமடைந்து சுவாசிக்கவில்லை என்பதை புரிந்துகொண்ட ஸ்ரீவேட், யானைக்கு சிபிஆர் முதலுதவி செய்து புத்துயிர் தர முடிவெடுத்தார் (சிபிஆர் என்பது மார்பை அழுத்தி சுவாசத்தை மீட்கும் ஒரு அவசரகால முதலுதவி ஆகும்).

இதையடுத்து செல்போன் லைட் வெளிச்சத்தில்  யானைக் குட்டியின் மார்பில் இரு கைகளையும் வைத்து கடினமாகவும் வேகமாகவும் அழுத்தம் கொடுத்தார். இரண்டு நிமிடங்கள் வரை இப்படி ‘புஷ்’ செய்தததும் யானை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது. இதயத்துடிப்பு சீரானதும் யானை எழுந்து நிற்க முயன்றது. இதையடுத்து யானைக் குட்டியை ஒரு வாகனத்தில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் யானைக் குட்டி நலமானதை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்துடன் குட்டி யானை சேர்க்கப்பட்டது. அங்கு நின்ற தாய் யானை தனது குட்டியை சேர்த்துக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்