தகுதியற்ற நபர் நாட்டை வழி நடத்தி வருகிறார்… நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி கடும் தாக்கு

0
65

டெல்லி : விவசாயிகளுக்கு முன்னால் எந்த சக்தியும் நிற்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரும் மனுவை ஜனாதிபதியிடம் கொடுக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்,  ராகுல் காந்திக்கு குடியரசு தலைவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 2 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் அவர்களிடம் ராகுல் காந்தி வழங்கினார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி,மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. ஆகவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்க மாட்டார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இட்ட 2 கோடி கையெழுத்து தொகுப்புடன் ஜனாதிபதியை சந்தித்தேன்.நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் விவசாயிகள் போராட்டத்தை கைவிடமாட்டார்கள்.விவசாயிகள், சிறு வணிகர்கள் பற்றி பிரதமருக்கு கவலை இல்லை. வேளாண் துறையை நாசமாக்க வேண்டாம். பிரதமர் மோடி விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அரசுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.தகுதியற்ற நபர் நாட்டை வழி நடத்தி வருகிறார். நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.ஜனநாயகம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.மொத்த அரசும் வெறும் 3,4 நபர்களுக்காக மட்டுமே இயங்கி வருகிறது.அரசுக்கு எதிரான முதலாளிகளுக்கு மட்டுமே வேளாண் சட்டங்கள் பயன்படும். அரசுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல.வேளாண் சட்டங்களை ரத்து செய்தே ஆக வேண்டும், என்றார்.