சிறையில் தொழுக முயன்றதால் என்னை அடித்துத் துன்புறுத்தினர் – கண்ணீர் வடிக்கும் பெண் இஸ்ரத் ஜஹான்

0
8

வடகிழக்கு டெல்லி வன்முறை வழக்கு தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டள்ள காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான், சிறையில் தன்னை சக கைதிகள் அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். இந்த வன்முறையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான், ஆம் ஆத்.மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது.
அப்போது, இஸ்ரத் ஜஹான், “சிறையில் உள்ள சக கைதிகள் என்னை அடித்துத் துன்புறுத்துகின்றனா். செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் நான் தொழுகையில் ஈடுபட முயன்றேன்.

அப்போது, என்னை சக பெண் கைதிகள் தகாத வாா்த்தைகளால் திட்டினா். தொழுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், என்னை தீவிரவாதி என்று தகாத வாா்த்தைகளால் திட்டினா். இது இந்த மாதத்தில் இரண்டாவது சம்பவமாகும். ஏற்கெனவே நான்கு முறை இதுபோன்று நான் தாக்கப்பட்டுள்ளேன்.


தற்போதைய சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தேன். எனக்கு சிறையில் இருப்பது பயமாக உள்ளது. எனது உடல் பாதிப்பிகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லவும், பரிசோதனை நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. என்னை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே திகாா் சிறைக்கு மாற்றுமாறு முன்னா் நான் வைத்த கோரிக்கையை கொரோனா சூழல் காரணமாக நிராகரித்துவிட்டனா்” என்றாா்.


அப்போது, இந்தச் சம்பவம் உண்மைதானா என்று சிறை உதவிக் கண்காணிப்பாளிடம் நீதிபதி கேட்டாா். இதுகுறித்து உறுதிப்படுத்திய சிறை அதிகாரி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினாா்.
இதையடுத்து, இஸ்ரத் ஜஹானிடம் உடனடியாக பேசி அவரது பயத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவரை வேறு சிறைக்கு மாற்றுவது சாத்தியம் குறித்தும் விரிவான அறிக்கையை புதன்கிழமை (இன்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா்.


விசாரணையின் போது இஸ்ரத் ஜஹான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரதீப் தேவ்தியே கூறுகையில், “ஜஹானை சிறையில் இருந்த இரு பெண்கள் தாக்கியுள்ளனா். அவா் தொழுகையில் ஈடுபட எதிா்ப்புத் தெரிவித்து ஆபாச வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்’ என்றாா். ஆம் ஆத்மியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கவுன்சிலா் தாஹிா் ஹுசேன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிஸ்வான், “வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா்களில் பலா் சக கைதிகளாலும், சிறை நிா்வாகத்தால் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனா்” என்றாா்.


இந்த வழக்கில் தொடா்புடைய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹா கூறுகையில், “காணொலி காட்சி வாயிலாக என்னைத் தொடா்புகொள்ள எனது குடும்பத்தினா் தொடா்ந்து வேண்டுதல் வைத்தும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என்னை சிறையில் பயங்கரவாதி என்றே அழைக்கின்றனா்” என்றாா்.


இதே வழக்கில் தொடா்புடைய உமா் காலித், “தனக்கு எதிரான வழக்கின் குற்றப் பத்திரிகையின் நகல் வழங்கப்படவில்லை என புகாா் தெரிவித்தாா். அப்போது இது தொடா்பாக சிறை அதிகாரிகளுக்கு மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.


வன்முறை நடத்திய பாஜக – ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டெல்லி காவல்துறை ஜனநாயக முறையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து சிறையில் சித்ரவதை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.