புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – தமிழ்த்தேசிய பேரியக்கம்

0
15

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசிய பேரியக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.தமிழ்த்தேசிய பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தங்கராசு நடராசன், இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டு விளையாடி வரும் இந்தத் தமிழ் மகனின் பெயரை இப்போது உலகத் தமிழர்கள் பெருமிதத்தோடு உச்சரித்து வருகின்றனர். இந்தியக் கிரிக்கெட் அணியிலுள்ள அந்த ஒற்றைத் தமிழனின் சாதனைகளைப் பேசிவரும் இந்த நேரத்தில், அவரைப் போலவே திறமை இருந்தும் “புதுச்சேரி” என்ற தனது சொந்த மாநிலத்தின் கிரிக்கெட் அணியிலேயே புறக்கணிக்கப்படும் புதுச்சேரியின் ‘தங்கராசு நடராசன்’களுக்காக நீதிகேட்டுப் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இராஜஸ்தானத்தைச் சேர்ந்த பங்கஜ் சிங், மும்பையைச் சேர்ந்த ஷஷாங்க் சிங், பரிக்ஷித் வல்சங்கர், சாகர் பரேஷ் உதேசி, சாகர் திரிவேதி, இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த பரோஸ் டோக்ரா, கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் மோகன் நாயர், ஃபேபிட் அகமது, வி.எஸ். அப்துல் சபர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆஷிஸ்ட் ராஜீவ் சங்கனக்கல் – இவர்களெல்லாம் யாரென்று பார்க்கிறீர்களா? புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள மட்டைப்பந்து வீரர்களாம் இவர்கள்.

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியும், காரைக்காலும் தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் வரலாற்றுத் தாயகங்கள். கேரளாவிலிருக்கும் மாகே, ஆந்திரத்திலிருக்கும் யானம் ஆகிய பகுதிகள், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டங்களாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும்கூட, மக்கள் தொகையில் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் 94 விழுக்காட்டினர். ஆனால், புதுச்சேரி கிரிக்கெட் அணியிலோ முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். “கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி” (சி.ஏ.பி.) என்ற தனியார் சங்கத்தின் வழியே தொடர்ந்து இம்முறைகேடு நடந்து வருகிறது.

இந்த அநீதியைக் கண்டித்தும், புதுச்சேரி அணியில் புதுச்சேரி – காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களுக்கே 90 விழுக்காடு இடமளிக்கும் வகையில், புதுச்சேரி அரசே தனி கிரிக்கெட் சங்கம் உருவாக்க வேண்டுமெனக் கோரியும், வரும் 26.12.2020 அன்று புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெருந்திரள் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது” என அறிவித்திருக்கிறது.