திரிணாமூல் காங்கிரசில் இணைந்ததால் கோபம்: மனைவியை விவாகரத்து செய்ய பாஜக எம்.பி முடிவு

0
61

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மனைவி இணைந்ததால் கோபம் அடைந்த பாஜக எம்.பி, மனைவியை விவகாரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் அம்மாநில அரசியலில் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. 


குறிப்பாக  ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் வார்த்தைபோர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட  எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்பட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 35 பேர் பாஜகவுக்கு தாவினர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை இவ்விவகாரம் ஏற்படுத்தியது. 
இந்த நிலையில்,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில்  மனைவி இணைந்ததால் கோபம் அடைந்த பாஜக எம்.பி, மனைவியை விவகாரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று காலை பாஜக எம்.பி சவுமித்ரா கான் என்பவரின்  மனைவி சுஜாதா மோண்டல் கான் இணைந்தார். இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாஜக எம்.பி, திருமண பந்தத்தை  அரசியல், முடித்து விட்டதாக கூறியுள்ளார். 


கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, பிஸ்னாபூர் தொகுதிக்குள் நுழைய  சவுமித்ரா கானுக்கு  இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்து இருந்தது. அப்போது, தனிநபராக பிரசாரத்தில் ஈடுபட்டு கணவர் வெற்றிக்கு கடும் பாடு பட்டவர் சுஜாதா.  தனது கணவர் வெற்றிக்கு கடும் பாடு பட்ட போதிலும் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று சுஜாதா குற்றம் சாட்டினார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்த சவுமித்ரா கான், அரசியலால் 10 ஆண்டு கால எங்கள் திருமண பந்தம் முறிந்துவிட்டது. பாஜகவுக்காக நான் கடுமையாக உழைப்பேன். நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவது இல்லை” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். 


பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சுஜாதா கான், அரசியல் வேறு குடும்பம் வேறு.  அவர் (கணவர்) என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை செய்யட்டும். ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக உணர்வார் எனக்கு நம்பிக்கை உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கூட அவர் வரலாம்” என்றார்