தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியார் மூலம் பணியாட்கள் தேர்வு – தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

0
6

நாமக்கல்:

எந்த சூழ்நிலையிலும் மின் வாரியம் தனியார் மயமாகாது என்று அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிட்டுள்ள மின்சாரத் துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,இரவு மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

50 சதவீதத்துக்கு மேல் மின் ஊழியர்கள் பணியிடம் காலியாக இருந்தால், அவுட்சோர்சிங் முறைப்படி ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது மழைக்காலமாக உள்ளது. மின் விபத்து மற்றும் மின்தடை ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. மின்சார பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஓப்பந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, தனியார்மயமாக்கவில்லை

எந்த சூழ்நிலையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது. மின்வாரியம் மட்டும் அல்ல, தமிழகத்தில் அரசுத்துறைகள் எதுவும் தனியார் மயமாகாது. அடையாளம் காணப்படாத ஒப்பந்த தொழிலாளர்களை, வேலைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறிவருகிறது. எங்களிடம் எந்த ஒப்பந்த தொழிலாளர்களும் கிடையாது.

தனியார் காண்ட்ராக்டர்களிடம் பணியாற்றியவர்கள் எந்த அளவுக்கு பணியாற்றினார்கள் என்பது தெரியாது.
எனவே கேங்மேன் பணியிடத்துக்கு முறைப்படி தேர்வு நடத்தப்பட்டது. 10 ஆயிரம் பேருக்கு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு அளிக்க தயராக இருக்கிறோம். இதற்கு தொழிற்சங்கங்கள்தான் தடையாக இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என முதல்வர் தெளிவாக கூறிவிட்டார். எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகிறார்கள்.இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.