மாடுகளை திருடி கசாப்பு கடைக்கு விற்பனை செய்த முன்னாள் பாஜக தலைவர் கைது

0
102

தெருவில் சுற்றும் மாடுகளை திருடி, கசாப்பு கடைகளுக்கு விற்பனை செய்து வந்த, பஜ்ரங் தளம் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா பகுதியைச் சேர்ந்தவர் அனில் பிரபு. இவர் தன்னை கவ் ரக்ஷா அதாவது பசு பாதுகாவலர் என கூறி, பசுவதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இவர் பாஜகவின் துணை அமைப்பான பஜ்ரங் தளத்தின் மாவட்டத் தலைவராகவும் இருந்துள்ளார்.


இந்நிலையில் அப்பகுதியில் தெருவில் சுற்றும் மாடுகள் தொடர்ச்சியாக காணாமல் போவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து யாசின் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெருவில் சுற்றும் மாடுகளை, திருடி, அதனை கசாப்பு கடைகளுக்கு விற்பனை செய்வது அனில் பிரபு தான் என்றும், அதற்கு தான் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அனில் பிரபுவை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கை செலவுக்காக, இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டதாகவும், கசாப்பு கடைக்காரர்கள் தன்னை நன்றாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

பசுக்களை பாதுகாக்கிறேன் என கூறிக் கொண்டு, பசு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துதல், பசுவை கொண்டு செல்பவர்களை தாக்குதல், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வந்த, அனில் பிரபு தற்போது, பணத்திற்காக, பசு மாடுகளை திருடி விற்றது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.


எனினும் அனில் பிரபு தங்கள் அமைப்பில், தற்போது செயல்பட வில்லை என பஜ்ரங் தளம் அமைப்பு தெரிவித்துள்ளது. பஜ்ரங் தளம் அமைப்பானது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவாகும். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதுக்கள் அமைப்பாகும். பாஜக என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.