போராடும் விவசாயிகள் காலிஸ்தான்கள்; பெரிய முதலாளிகள் சிறந்த நண்பர்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

0
5

மோடி அரசுக்கு பெரிய முதலாளிகள் சிறந்த நண்பர்கள், போராட்டம் நடத்தும் விவசாயிகல் காலிஸ்தான்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் பேசுகையில், “விவசாயிகள் போராட்டத்தின் போக்கு திசை மாறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளுடன் மாவோயிஸ்டு ஆதரவாளர்களை, இடதுசாரிக் கொள்கை கொண்டோரை அதிகமாகப் பார்க்க முடிகிறது.

வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்.போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும், கவிஞர்களும் கலந்து கொள்வது வேடிக்கையானது.


உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதைவிடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மேலும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், விவசாயிகள் போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் நுழைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மத்திய அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், ட்விட்டரில் மத்திய அரசை , விவசாயிகளை போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினர் இருக்கிறார்கள் எனக் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள் மோடி அரசுக்கு தேசவிரோதிகள். மோடி அரசுக்கு கவலை தெரிவிக்கும் மக்கள் நகர்புற நச்கலைட்டுகள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் கரோனா வைரஸை சுமந்து செல்பவர்களாக மோடி அரசுக்குத் தெரிகிறார்கள். பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதும் கருதப்படமாட்டார்கள், போராடும் விவசாயிகள் காலிஸ்தான்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் பெருமுதலாளிகள் மோடி அரசுக்கு சிறந்த நண்பர்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.