ஊழல் வழக்கு : பதவியேற்ற மூன்றாவது நாளில் பிஹார் கல்வி அமைச்சர் ராஜினாமா

0
65

பிஹாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் பதவியேற்று மூன்று தினங்களே ஆன நிலையில், கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


பிஹாரில் கடந்த திங்கள்கிழமை நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து 14 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரி பதவியேற்றார்.

எனினும் சவுத்ரியைக் கல்வி அமைச்சராக நியமித்ததற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாயின. பிஹார் வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சவுத்ரி பணியாற்றிய காலத்தில், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஊழல் செய்துள்ளதாக ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சித்தன.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளித்தது மிகப்பெரிய தவறு என்றும், சவுத்ரியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


இது தொடர்பாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்தார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், தேசிய கீதத்தை ஒரு பள்ளி விழாவில் தவறாகப் பாடிய கல்வி அமைச்சர் மேவாலாலின் வீடியோவைப் பதிவேற்றம் செய்திருந்தார்.


இதுகுறித்து தேஜஸ்வி ட்விட்டரில் குறிப்பிடும்போது, “மேவாலால் சவுத்ரி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவருக்கு தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை. இதுபோன்றவரைக் கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி?” எனக் கேள்வி எழுப்பினார்.


இந்நிலையில், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து மேவாலால் சவுத்ரி இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்த பின்னர் மேவாலால் சவுத்ரி தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


பிஹார் ஆளுநர் பாகு சவுகான், புதிய கல்வி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேவாலால் சவுத்ரியின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அமைச்சரின் ராஜினாமா குறித்து ஆளுநர் அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரபூர்வ கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.