தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடி நீக்கம்; அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை!

0
95

அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை  நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ் அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா  அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. இந்த  தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும்  நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை ஜனநாயகக் கட்சி  வேட்பாளர் ஜோ பைடன் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் 46  ஆவதி அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல்  தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அதிபர் ட்ரம்பும் அவரின் ஆதரவாளர்களும்  தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.  இதற்கு ஏற்றார்போல் ஜோபைடன்  வெற்றிபெற்ற முக்கிய மாகாணங்களில்  இரண்டு தரப்பினருக்கும் இடையே குறைந்த அளவிலான வாக்கு  வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன.  மேலும் ஜார்ஜியாவில் எண்ணப்பட்ட  மறுவாக்கு எண்ணிக்கையில் சுமார் சுமார் 2500 வாக்குகள் அதிபர் ட்ரம்புக்கு சாதகமாக வந்துள்ளது. 

இதனிடையே ட்ரம்பின் இந்த தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி பலரும் மறுத்து வருகின்றனர். இதில் தேர்தல் குற்றச்சாட்டை மறுத்தவர்களில் தேர்தல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் கிரெப்சும் ஒருவர். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப் கிறிஸ் கிரெப்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.