தப்லீக் ஜமாத் வழக்கு : பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

தப்லீக் ஜமாத் இஸ்லாமிய அமைப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு அளித்துள்ள பதில் தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement


நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யவும் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.


ஜாமியத் உலமா இ ஹிந்த் என்னும் அமைப்பு, தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து சில ஊடகங்கள் மத ரீதியிலான செய்திகளை வெளியிட்டதாகவும், இஸ்லாமிய சமூகத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்ததாகவும் கூறி அந்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.


மார்ச் மாத மத்தியில் தப்லீக் ஜமாத் இஸ்லாமிய மதக்குழு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மர்காஸ் மசூதியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.


இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலானவர்கள் தொற்றுக்கு உள்ளான இடங்களில் இந்த மசூதியும் ஒன்றாக இருந்தது.
ஜாமியத் உலமா இ ஹிந்த் தொடர்ந்த வழக்குக்கு ஆகஸ்ட் மாதம் பதில் மனு தாக்கல் செய்திருந்த மத்திய அரசு, உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் போலிச் செய்திகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக இந்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இது குறித்த செய்தி வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்திருந்தது.
அப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால், அது பேச்சுரிமை மற்றும் இதழியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.


மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் வெளியான போலிச் செய்திகள் குறித்து பல இடங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன என்றும் அப்போது நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் மாதம் எட்டாம் தேதி நடந்த பொழுது இளநிலை அதிகாரி ஒருவர் மூலமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலாளர் மூலமாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் மத்திய அரசிடம் கடுமை காட்டினர்.
பின்னர் நவம்பர் மாதம் 13ஆம் தேதி இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நீதிமன்றத்தில் தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.


அதில் ஜாமியத் உலமா இ ஹிந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குறிப்பிட்ட சில ஊடகங்கள்’ என்றும் ‘குறிப்பிட்ட சில செய்திகள்’ என்றுமே கூறப்பட்டுள்ளது; எந்த ஊடகம் எந்த செய்தி என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை, என்று கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபொழுது, உங்களது பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை; நீங்கள் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ஒழுங்காற்று சட்டத்தின் அடிப்படையில் மற்றும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட பொறிமுறைகள் மூலமும் இதை அணுகவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஊடகங்களுக்கு எதிரான புகார்கள் ஆகியவற்றை இந்த சட்டத்தை கடந்த காலங்களில் மத்திய அரசு எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தையும் நீக்கி புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இன்னும் மூன்று வார காலத்துக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

33 Comments

Back to top button