ஹத்ராஸ் இளம்பெண், கள்ளத்தொடர்பு இருந்தது, குற்றவாளிகள் அப்பாவி – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

0
319

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். மிகவும் கொடூரமான இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, வழக்கு தொடர்பாக, 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

“உயிரிழந்த இளம்பெண்ணிற்கும், கைது செய்யப்பட்ட 4 பேர்களில் ஒருவருக்கும், கள்ளத்தொடர்பு இருந்திருக்கும். அதனால், அந்த சமயத்தில், அந்த நபர் அங்கே வந்திருக்கிறார். இந்த செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. அதன் பின் தான் அந்த பெண் பிடிபட்டிருக்க வேண்டும்.

இந்த விஷயம் பற்றி அந்த அப்பெண்ணின் பெற்றோர்களே, அவளை கொன்றிருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார். பாஜக தலைவரின் இந்த பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.