பலிகடா ஆக்கப்பட்ட தப்லிக் ஜமாஅத் மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

0
19

பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத் மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

TNTJ அமைப்பின் பொதுச் செயலாளர் இ.முஹம்மது அறிக்கையில் கூறியிருப்பதாவது


டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன என தங்கள் தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.


விசா விதிகளை மீறி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது
1. பெருந்தொற்று நோய்கள் சட்டம், 2. மகாராஷ்டிரா போலீஸ் சட்டம்,
3. பேரிடர் மேலாண்மை சட்டம்
4. வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


மத்திய, மாநில அரசுகள் இப்படி ஒரு அநியாயத்தை அறங்கேற்றி இருக்கின்றன. ஊடகத்துறை பின்னிய பிம்பமும் பிரமாண்டமும் இதற்கு பின்னணியாக இருந்தது. என்பது இங்கு மறுக்க முடியாத உண்மையாகும்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
மத சார்பற்ற இந்த நாட்டில் இது போன்ற தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவையாகும்.


வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து அவர்களுக்கு ஆதரவு இல்லை என்று சொல்லி பல வழக்குகள் அவர்கள் மீது பதியப்பட்டு பல மாதங்கள் சிறை வாழ்க்கை அனுபவித்து விட்டனர்.


முஸ்லிம் ஒருவர் கைது செய்யப்படும்போது அவர் மீது மிகைப்படுத்தப்பட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு அவரை தீவிரவாதியாக சித்தரிப்பதும், நீதிமன்றத்தின் மூலம் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பிறகு அதை குறித்த செய்திகள் வெளியிடாமல் தங்களுடைய ஊடக (அ)தர்மத்தை பத்திரிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன.


இந்தியாவில் கொரோனா பேரிடர் ஆரம்பமான காலத்தில் தப்லீக் ஜமாஅத் குறித்த தவறான பார்வையை கொண்டு சென்றதில் பெரும் பங்கு மீடியாக்களுக்கு உண்டு. தற்போது மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஊடகத்துறையினர் அமைதி காப்பது ஊடக தர்மத்திற்கு எதிரானது என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.


ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணவுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளார்கள்.


விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தாங்களுக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை உறுதிப்படுத்திய மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனதார பாராட்டுகிறோம்