அர்ஜூனா விருதைப் பெற நான் என்ன சாதிக்க வேண்டும்” வீராங்கனை சாக்சி மாலிக் கேள்வி !

0
28

அர்ஜூனா விருதைப் பெற வேறு என்ன நான் சாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தாண்டு கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோனாச்சார்ய விருதுகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதில் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்குக்கு அர்ஜூனா விருது பரிந்துரைக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்தாண்டு தனக்கு அர்ஜூனா விருது கிடைக்கும் என சாக்சி மாலிக் எதிர்பார்த்து காத்திருந்தார், ஆனால் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் “தனக்கு கேல் ரத்னா விருது வழங்கியது மகிழ்ச்சி. எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் அனைத்து விருதுகளையும் வாங்க வேண்டும் என்பது கனவு. ஏனென்றால் விளையாட்டு வீரர்கள் தங்களை ஆபத்தில் ஈடுபடுத்துகிறார்கள். எனக்கும் அர்ஜூனா விருது என்பது என் கனவு” என்றார்.

மேலும் “நான் அர்ஜூனா விருதை பெறுவதற்கு இந்த நாட்டுக்காக வேறு என்ன பதக்கங்களை நான் வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மல்யுத்தப் பிரிவில் அர்ஜூன் விருதைப் பெறும் தகுதி எனக்கு இல்லையா” என கேள்விக்கேட்டுள்ளார் சாக்சி மாலிக்.