கேலி செய்து துரத்தியதால் சாலை விபத்தில் இளம்பெண் மரணம்! உபியில் கொடூரம்

சுதீக்ஷா பாட்டி(20) என்ற பெண் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இவர் 2018ஆம் ஆண்டு 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். கொரோனா தொற்றால் ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த மாதம் அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்த சுதீக்ஷா படிப்பு சம்பந்தமான சில பொருட்களை வாங்குவதற்காக புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மாமாவுடன் நேற்று மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார்.

சென்றுகொண்டிருந்த போது இரண்டு நபர்கள் அருகில் வந்து அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

கிராமத்திற்கு அருகில் வரவர இவர்களுக்கு வழிவிடாமல் முன்னும் பின்னுமாக குறுக்கே வந்துள்ளனர். சுதீக்ஷாவின் மாமா மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டியபோதும் திடீரென்று பின்னால் வந்து இடித்ததால் இருவரும் நிலைதவறி கீழே விழுந்துவிட்டனர். விபத்து நடந்தவுடன் சுதீக்ஷாவுக்கு தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழே விழுந்ததைப் பார்த்த உடனே அந்த நபர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என சுதீக்ஷாவின் மாமா சதேந்தர் பாட்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த அவுரங்காபாத் போலீஸார், இளம்பெண்ணின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விபத்து குறித்து விசாரித்தபோது யாரும் கேலி கிண்டல் பற்றி பேசவில்லை எனவும், விபத்து நடந்த நேரத்தில் சுதீக்ஷா உறவினருடன் இருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.