என்கவுண்டருக்கு பயந்து பாஜகவில் இணைந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி.. 6 படுகொலை, 35 வழக்குகள் நிலுவை..!

0
48

வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆகையால், அண்மைக்காலமாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் சேர்ந்து வருகின்றனர். கட்சியில் இணைந்த அவர்களுக்கு உடனடியாக கட்சியில் பதவி வழங்கப்பட்டு வந்தது. இது காலம் காலமாக பணியாற்றி கட்சியை வளர்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அவர்கள் கட்சியில் இணைகிறார்கள், பதவியை வாங்குகிறார்கள் அதோடு சரி. அவர்கள் கட்சிக்காக நடைபெறும் எந்த போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டத்திலோ பங்கேற்பது இல்லை.

இந்நிலையில், தற்போது பாஜவில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஒருவர் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த கல்வெட்டு ரவி தான் அவர். அவருடன் மற்றொரு ரவுடி சத்யா(எ)சத்தியராஜ் என்பவரும் கட்சியில் சேர்ந்துள்ளார். கல்ெவட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் நேற்று பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜக பொது செயலாளர் கருநாகராஜன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியில் இணைந்த பிரபல ரவுடி ரவி (எ) கல்வெட்டு ரவி(எ)ரவிசங்கர் (42), மீது கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலைகள் என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. மேலும் 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். ஏற்கனவே சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முரளி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.