மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற டிரைவர் மீது கொடூர தாக்குதல்: பசு பயங்கரவாதிகள் அட்டூழியம்

0
14

டெல்லி அருகே சுத்திலியால் அடித்து பயங்கரம் : மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற டிரைவர் மீது கொடூர தாக்குதல்: பசு பயங்கரவாதிகள் அட்டூழியம்

மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட, காலில் பலத்த அடியுடன் எழுந்து கூட நிற்க முடியாமல் அவர் கதறி அழுதார்.  ஆனால், அவரை சுற்றி  நின்ற மக்களும், போலீசாரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, கும்பல் தாக்குவதை தடுக்கவில்லை

குர்கான்: டெல்லி அருகே குர்கானில் மாட்டிறைச்சி கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் பசு பயங்கரவாதிகள் கும்பல் ஒன்று, லாரி டிரைவரை சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறியுடன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பல் கொலை குறித்து நாடெங்கிலும் கண்டன குரல்கள் எழுந்தன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை பார்த்துக் கொண்டு அரசு வேடிக்கை பார்க்காது என பிரதமர் மோடி கூட கண்டித்தார்.

பிரதமர் கண்டித்த அன்றே ஒரு சம்பவம் நடந்துள்ளது

தாத்ரி சம்பவம் போலவே டெல்லி அருகே அரியானா மாநிலம், குர்கானில் பயங்கர சம்பவம் அரங்கேறி உள்ளது. குர்கானில் மாட்டிறைச்சி கடத்துவதாக லுக்மேன் என்ற லாரி டிரைவரை கும்பல் ஒன்று சுமார் 8 கிமீ துரத்தி சென்று மடக்கியது. பின்னர், சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட, காலில் பலத்த அடியுடன் எழுந்து கூட நிற்க முடியாமல் அவர் கதறி அழுதார். ஆனால், அவரை சுற்றி  நின்ற மக்களும், போலீசாரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, கும்பல் தாக்குவதை தடுக்கவில்லை. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.

பின்னர், அந்த கும்பல் லுக்மேனை கோணியில் மூட்டையாக கட்டி, பாத்ஷாபூர் என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று அங்கும் வைத்து அடித்துள்ளனர். அங்கு விரைந்த போலீசார், தாத்ரி சம்பவத்தை போலவே, சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்வதை விட்டு, லுக்மேன் கொண்டு வந்த இறைச்சியை ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

லுக்மேனை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் பிரதீப் யாதவ் என்பவர் மட்டுமே கைதாகி உள்ளார். வீடியோவில் தாக்குதல் நடத்திய யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. அவர்களை தேடி வருவதாக குர்கான் கூடுதல் கமிஷனர் பிரித்பால் சிங் கூறி உள்ளார். லாரியின் உரிமையாளர் கூறுகையில், ‘‘லாரியில் இருப்பது எருமை இறைச்சி. 50 ஆண்டாக இந்த தொழிலை நான் செய்து வருகிறேன்’’ என்றார்.