தீரன் சின்னமலை நினைவு நாள் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

0
11

தீரன் சின்னமலை நினைவுநாள்முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆண்டு தோறும் ஆடி 18ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆடி 18ம் நாளான இன்று தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும், முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

ஊரடங்கின் போது அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் புலவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி, ஐந்தைந்து பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள தீரன் சின்னமலையின் பிறந்த ஊரான மேலப்பாளையத்தில், அவரது உருவப்படத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சேலம் சங்ககிரி மலைக்கோட்டையில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர், தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.