வேறு வழி தெரியவில்லை, அப்பா, அம்மா என்னை மன்னியுங்கள்’ – ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்!

0
77

சென்னையில் ஆன்லைன் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். இவர் சென்னைக்கு அருகேயுள்ள காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாகக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் டாட்டூ குத்தும் தொழிலையும் செய்து வந்துள்ளார் நிதிஷ்குமார். மற்ற நேரங்களில் வீட்டில் ஓய்வெடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டு நேரத்தைக் கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கடைக்குச் சென்ற நிதிஷ்குமார் விடிந்த பிறகும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கடையின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் கடைக்குச் சென்று பார்த்தபோது கடைக்கு வெளியே நிதிஷ்குமாரின் பைக் நின்றுள்ளது. ஆனால், கதவு உட்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. மற்றொரு சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது தான் நிதிஷ்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இறப்பதற்கு  முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், ”ஆன்லைனில் சூதாட்டம் விளையாடித் தோற்றுவிட்டேன். தற்கொலை செய்துகொள்வது தவறுதான். வேறு வழி தெரியவில்லை. அப்பா, அம்மா மற்றும் காதலிக்கு மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்மி சர்க்கிள், பப்ஜி, ஐ.பி.எல் போன்ற ஆன்லைன் கேம்களில் பணம் கட்டி விளையாடியுள்ளார் நிதிஷ்குமார். ஆன்லைன் சூதாட்டத்தில் தனது சேமிப்பு முழுவதையும் இழந்துவிட்டார். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கடையில் இருந்த பணத்தையும் எடுத்து கேஸ்ட்ரோ க்ளப் எனும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடியுள்ளார். அதிலும் தோற்று பணம் முழுவதையும் இழந்துள்ளார். அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிதிஷ்குமார் உடலைமீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.