தமிழ்நாடு உருது அகாடமியை செயல்பாட்டிற்குக் கொண்டு வரத்
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
30

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாட்டில் உருது மொழியைப் பரப்பவும், அதன் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உருது அகாடமி தற்போது செயல்படாமல் உள்ளது. தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட இந்த அகாடமியில் 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சிக்குழுவையும், 11 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவைக் கொண்டது. ஆட்சிக் குழு மற்றும் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் அவர்கள் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகள் அதன் பொறுப்புகளில் இருப்பார்கள்.

கடந்த பல ஆண்டுகளாகத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்காமல் செயல்பாடற்ற நிலையிலிருந்த உருது அகாடமியை செயல்படுத்த வேண்டும் எனக் கடந்த 2014 ஆண்டு சட்டமன்ற பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நானும் மறைந்த ஆம்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம்பாஷா அவர்களும் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் உருது அகாடமிக்கான துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணி நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் உருது அகாடமியை தமிழக அரசு திருத்தி அமைக்காமல் காலந்தாழ்த்தி வருவது உருது மொழியையும், அதன் மேம்பாட்டையும் பெரிதும் பாதிக்கும்.
எனவே தமிழக அரசு, உருது அகாடமியின் ஆட்சி மன்றக் குழு மற்றும் நிலைக் குழுவைத் திருத்தி அமைத்து அதனைச் செயல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.