கொரோனா நடவடிக்கை பிற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி SDPI கட்சி வலியுறுத்தல்

0
11

கொரோனா நடவடிக்கை: பிறமாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ் பரவல் சென்னையை மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அரசின் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மருந்துக்கு கூட சிறிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக, நாள்தோறும் எண்ணிக்கை என்பது அதிகரித்து தான் வருகின்றது. இது பெரும் கவலையை அளிக்கின்றது.

நோய் பரவல் மட்டுமின்றி, தொழில்கள் முடக்கம், வேலையின்மை, ஊதியமின்மை, ஊதியக் குறைவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட எண்ணற்ற சிக்கலில் தமிழகம் சிக்கியுள்ளதை காண முடிகின்றது.

இந்த சூழலில் பல்வேறு மாநிலங்களும் இதுதொடர்பாக தத்தமது மாநில நிலைமையை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியும், சமூக ஆர்வலர்கள், பல்துறை வல்லுநர்கள், களப்பணியாளர்கள் கூட்டம் நடத்தியும் ஆலோசனைகளைப் பெற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. அரசியலை தாண்டி, மக்கள் நலன் என்ற அடிப்படையில் அந்த மாநிலங்கள் செயல்பட்டு வருகின்றன.

கேரளாவில் காணொளி காட்சி வழியாகவே இத்தகைய கூட்டத்தை அம்மாநில அரசு மேற்கொள்கிறது.

தமிழகத்தில் இதுபோன்றதொரு ஆலோசனைக் கூட்டம் என்பது கொரோனா நடவடிக்கை துவங்கி இதுவரை நடைபெறவில்லை.

பல்வேறு அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த தொடர்ந்து வலியுறுத்திய போதும், அந்த கோரிக்கையை தமிழக அரசு உதாசீனம் மட்டுமே செய்து வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகமோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில், இனியும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என கூறிக்கொண்டிருக்காமல் தற்போதைய தமிழகத்தின் சூழலை கருத்தில்கொண்டு, மக்களின் நலனுக்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசனைகளைப் பெற்று நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இயங்கினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் முழுமையான வெற்றியை அடைய முடியும் என்பதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு, விரைவாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.