கோவையில் கோவில்களை சேதப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

0
27

கோவையில் கோவில்களை சேதப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கோவையில் , டவுன்ஹால் ஐந்து முக்குப் பகுதி,கோவை இரயில் நிலையம் பகுதி, கோட்டைமேடு பகுதி, நல்லாம்பாளையம் பகுதி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்களின் வாசல்களில் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களின் டயர்களை தீ வைத்து எரித்து அராஜகத்தில் ஈடுபட்டவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.
இச்சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களாக சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில் கோவையில் கோவில்களுக்கு முன் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை ஒரு மனநோயாளி செய்தார் என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை முடித்து விடக் கூடாது. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு அவ்வாறு முடிக்கப்படும் நிலை இருந்ததுண்டு.

எனவே தமிழகத்தின் சமூக நல்லிணக்கம் நீடித்து நிலைக்கும் வகையில் இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து கஜேந்திரனுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து கடுமையாக அவர்களைத் தண்டிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் ஆவணச் செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.