மின் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்த கிராமத்தினர்

0
15

மின் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்த கிராமத்தினர்.. பரபரப்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்க வந்த மின்வாரிய ஊழியர்களை கிராமத்தினர் மின் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின்சாரக் கட்டணத்தை கணக்கிடுவதிலும் கட்டணத்தை வசூலிப்பதிலும் குழப்பமான நிலை உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மின் கட்டண வசூல் குறித்து நீதிமன்றங்களை எதிர்க்கட்சிகள் நாடின. இந்த லாக்டவுனை பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மின் கட்டணத்தை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனால் இந்த சமயங்களில் மின்வாரியத் துறை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் முற்றின. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஏசைய்யா, ரவி ஆகியோர் அலதுர்கம் கிராமத்தில் மின் கட்டணத்தை கணக்கிடுவதற்காக நேற்று அங்கு சென்றனர்.

அப்போது கிராமமக்களிடம் உடனடியாக மின்கட்டணத்தை செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராமத்தில் சிலருக்கும் மின்வாரிய துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாக்டவுனால் வேலையிழந்து வாழ்வாதாரத்தையே தொலைத்த நிலையில் மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது என கேள்வி எழுப்பினர். மேலும் ஷார்ட் சர்கியூட்டால் பல வீடுகளில் டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட மின்சாதனங்கள் கெட்டுவிட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து எங்களிடம் கூறி ஒன்றும் இல்லை, லைன்மேன் அல்லது உதவி பொறியாளரிடம் புகார் கொடுங்கள் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த பதிலையே கொடுத்தால் எப்படி என கேட்டு லைன்மேன், உதவி பொறியாளர் வரும் வரை அவர்கள் இருவரையும் அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு லைன்மேன் நவாஸுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அப்போது அவரையும் அவர்கள் கட்டி வைத்தனர்.

இதனிடையே மூவரும் உதவி பொறியாளர் ராம்பாபுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இவர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டியதால் அந்த மூவரும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த மூவரின் புகாரின் பேரில் போலீஸார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.