தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

0
15

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை : மாவட்ட ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி பேட்டியின் போது கூறினார்.

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி
இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 2541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1359 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 1193 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகள் மற்றும் கோவிட்-19 சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோக சில வசதி வாய்ப்பு படைத்தவர்கள் அவரவர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டயறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் தினசரி அவர்களது உடல்நிலை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர் தினசரி தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று அவர்களது உடல் நலம் குறித்து விசாரிப்பார்கள். உடல்நிலை திடீரென மிகவும் பாதிக்கப்பட்டால் உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 25 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளாக கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மாநகராட்சி பகுதி, காயல்பட்டணம், திருச்செந்தூர், ஏரல் ஆகியவை உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 25 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன ஏற்கனவே ஏழு இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் இயங்கி வரும் நிலையில் நாளை முதல் புதிதாக ஐந்து இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் செயல்படத் தொடங்கும்.

கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம்களால் கொரோனா பரவல் வேகம் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு செய்ய தேவையில்லை. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தினால் போதுமானது. டூவிபுரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே இறந்தவர் உடல் தகனம் நடந்து முடிந்து விட்டது. மேலும் இறுதி சடங்கில் அதிகம் பேர் கூடி விட்டனர். அந்த இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள், இறந்த முதியவரது குடும்பத்தினர் ஆகியோரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.