ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவலா? அதிரடிப்படை தேடுதல் வேட்டை

0
14

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், நக்சலைட்டுகள் ஊடுருவலா? அதிரடிப்படை தேடுதல் வேட்டை…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை, அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தக்காட்டில் மான்கள்,யானைகள்,புலிகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் அதிகமாக உள்ளது. 

மேலும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் இந்தப்பகுதி உள்ளது. திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான பட்டுப் பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து உள்ளிட்ட பகுதிகள், கேரளா மாநில எல்லை வரை அமைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், காட்டுப்பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு தடையுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாததால், நக்சலைட்டுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஊடுறுவியுள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட, நக்சல் தடுப்பு சிறப்பு அலுவல் பிரிவைச் சேர்ந்த சுமார்  20க்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் துப்பாக்கிகளுடன், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதம் காலம் மலைப்பகுதிகளில், தேடுதல் வேட்டை ஈடுபடப் போவதாக அவர்கள் கூறினார்கள்.

மேலும் மலையடிவாரப்பகுதியில் விவசாயம் செய்பவர்கள், கால்நடைகளுடன் மேய்ச்சல்களுக்கு செல்பவர்கள், சந்தேகப்படும்படியாக மலைப்பகுதிகள், மலையடிவாரப்பகுதிகளில், நடமாடும் பொது மக்களிடமும் விசாரணை  நடத்தி,  அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் பெற்று வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது, அந்தப்பகுதி கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.