சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

0
14

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மேலும் திரை பிரபலங்களும் இதுகுறித்து அழுத்தத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் மோசமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரிடமும் அவர்கள் வைத்திருந்த செல்போன் கடையிலும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர், எழுத்தரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் நேற்று சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜூலை 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே மற்றொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், மற்றொரு காவலர் முத்துராஜ் ஆகியோர் தலைமறைவாகினர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் இன்று அதிகாலை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் தலைமறைவாக உள்ள மற்றொரு காவலரான முத்துராஜை பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோரை கைது செய்த சிறிது நேரத்தில் கைது செய்துவிட்டார்கள். இந்த சிபிசிஐடி வசம் இந்த வழக்கு சென்றவுடன் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கின்றன. மொத்தம் 4 பேர் கொலை வழக்கு பதிவான நிலையில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்று, வியாழக்கிழமை, அதிகாலை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பால கிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகிய மூவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின், காலை 10 மணியளவில் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆய்வாளர் ஸ்ரீதர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமையன்று அதிகாலை 12.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டியின் ஐ.ஜி. சங்கர், “சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. அதில் ஒன்றை கொலை வழக்காக பதிவுசெய்து ஒரு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர். மற்றொரு காவலர் முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி உரிமையியல் நீதிபதி பாரதிதாசன் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து சாத்தான்குளம் காவல்நிலைய எழுத்தர் பியூலா செல்வக்குமாரியிடம் 4 மணி நேரம் நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்தது. காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டதையடுத்து, ரகு கணேஷ் தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த நெடுங்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த வழக்கில் 2 காவலர்கள், 2 எஸ்.ஐ.க்கள், ஒரு காவல் ஆய்வாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்