விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இளம்பெண் குத்திக்கொலை கணவனை தேடும் போலீசார்

0
15

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இளம்பெண் குத்திக் கொலை.. கணவனை தேடும் போலீசார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (22), இவரது கணவர் சரவணகுமார் (28). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் பட்டாசு ஆலையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த போது, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு கயல்விழி என்ற எட்டு மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது.

சரவணகுமார் கஞ்சா, மது என போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் வேலைக்கு சரிவர செல்லாமலும், வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்ததால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் சரவணகுமார் அண்ணன் சுப்புராஜுவுடன், ஜெயலட்சுமிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விசயம் சரவணகுமாருக்கு தெரிய வந்ததால் மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ஜெயலட்சுமி இரண்டு வாரங்களுக்கு முன் தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இன்று ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்த சரவணகுமார், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவருடன் வர மறுத்த ஜெயலட்சுமியை, வீட்டு பின்பக்கம் இழுத்துச் சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு, சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததைப் பார்த்த சரவணகுமார் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் கேள்விப்பட்ட சிவகாசி கிழக்கு போலீசார், ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சரவணகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்திகளுக்காக
மகேஸ்வரன்
விருதுநகர் மாவட்ட செய்தியாளர்