அவ்வளவுதானா சீனாவிற்கு எதிரான மனநிலை? சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ONE PLUS 8 Pro மொபைல்

0
22

சென்னை: சீனாவிற்கு எதிரான மனநிலையை சமுக வலைதளங்களில் மக்கள் ஒரு பக்கம் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் அந்த எதிர்ப்புகளை மீறி சீனாவின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைல் போன் சில நிமிடங்களில் ஆன்லைனில் விற்றுத் தீர்த்தது. இதன் மூலம் சீனபோன்களுக்கு இந்தியாவில் உள்ள டிமாண்ட் சற்றும் குறையவில்லை என்பது தெரிகிறது.


இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தைய தற்போது முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனா நிறுவனங்கள். சியோமியின் ரெட்மி சீரியஸ் மொபைல் போன்களின் வருகைக்கு பின் வரிசையாக அனைத்து சீன நிறுவனங்களும் தங்கள் மொபைல் வரிசைகளை களம் இறக்கி வெற்றி கண்டன.


இப்போது இந்தியாவில் விற்கும் டாப் ஐந்து மொபைல் பிராண்டுகள் என்றால் சியோமி, விவோ, ரியல்மே, ஒப்போ, ஒன்பிளஸ் தான். இந்த நிறுவனங்கள் எந்த செல்போன் வரிசையை இந்தியாவில் களம் இறக்கினாலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும். ஏனெனில் ஏதாவது சிறப்பு அம்சங்கள் உடன்தான் இவை களத்தில் குதிக்க வைக்கப்படுகின்றன.20 வீரர்கள் மரணம்
இப்படி சீன போன்கள் ஆதிக்கம் இந்தியாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த வாரம் 15ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்களின் கோழைத்தனமான தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, அது இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக கொளுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில் சீன பொருட்களை விற்க மாட்டோம் என்று 500 சீனப் பொருட்கள் பட்டியல் பட்டியலை இந்திய வியாபாரிகள் சங்கத்தினர் அண்மையில் வெளியிட்டனர்.


சீன எதிர்ப்பு போராட்டம்
சீன தயாரிப்பு டிவி, மொபைல்களை தெருவில் போட்டு மக்கள் உடைத்தனர். போராட்டங்களும் பல இடங்களில் நடந்தது. ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி சீன மொபைல் விற்றுள்ளது. ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய வரவுகளான ஒன் ப்ளஸ் 8 மற்றும் ஒன் ப்ளஸ் 8 புரோ ஆகியவை அமேசான் தளத்தில் ஜூன் 15 மற்றும் 18 ஆம் தேதிகளின் சிறப்பு ஆன்லைன் விற்பனை மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான சில நிமிடத்திலேயே அத்தனையும் விற்று தீர்த்தது.

அமேசான் தளத்தில் விற்பனை
எத்தனை போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டது என்ற விவரத்தை அமேசான் நிறுவனமோ அல்லது ஒன் ப்ளஸ் நிறுவனமோ வெளியிடவில்லை. சுமார் 10 லட்சம் போன்கள் விற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் விலை 30 ஆயிரத்துக்கும் மேல் என்பது முக்கிய தகவல் ஆகும். சீன பொருட்களை வாங்க கூடாது. அதை புறக்கணிப்போம் என்ற மிகப்பெரிய எதிர்ப்பு உணர்வுக்கு நடுவே சீனாவின் ஒன் ப்ளஸ் மொபைல் போன் விற்பனை பட்டையை கிளப்பி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


சியோமி லேப்டாப்
இதற்கிடையே சீன பொருட்கள் விற்பனைக்கு எதிராக பிரச்சாரம் அதிகரித்து இருப்பதால் , சீனா நிறுவனமான ஒப்போ தனது புதியவகை செல்போனை ஆன்லைனில் அறிமுகம் செய்வதை ஒத்தி வைத்து உள்ளது. ஆனால் இந்திய செல்போன் விற்பனையில் முக்கிய இடம் பெற்றுள்ள சியோமி நிறுவனம், ஜூன் 17 முதல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.