பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் பருத்தி மூட்டைகளை சாலையில் அடுக்கி விவசாயிகள் சாலை மறியல்.

0
14

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் பருத்தி மூட்டைகளை சாலையில் அடுக்கி விவசாயிகள் சாலை மறியல்.

சீர்காழி ,ஜுன்- 24;
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா முழுவதும் பருத்தியை நல்ல முறையில் விவசாயம் செய்தனர் விவசாயிகள். நன்கு விளைந்த பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்வதற்குள் கொரோனா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததால், பருத்தி அறுவடையில் பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்தனர்.

தற்போது அதனை அறுவடை செய்து சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துவந்து விற்பனைக்காக மூன்று நாட்களாக காத்திருந்தனர். அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் நடை பெற்றது அந்த ஏலத்தின் போது மத்திய அரசு நிர்ணயம் செய்த கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 5,500/-யை குறைத்து தனியார் வியாபாரிகள் ரூபாய் 3,300/- க்கு ஏலம் கேட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த விவசாயிகள் இதற்கு அரசு அதிகாரிகளும் உறுதுணைபோவதாக கூறி ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து எதிரே உள்ள சிதம்பரம் – சீர்காழி பிரதான சாலையில் அமர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை அடுக்கி அதிலிருந்து பஞ்சை எடுத்து சாலையில் கொட்டி கோஷமிட்டனர்.

இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள்

தொடர்ந்து பருத்தி விவசாயிகளை பழிவாங்கும் நோக்குடன் வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய வகையில் அரசு செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர் நெல் கொள்முதல் செய்வது போல ஒவ்வொரு கிராமத்திலும் பருத்தி கொள்முதல் நிலையம் அமைத்து பருத்தி கொள்முதல் செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதே நிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.