பொதுவான செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்.

தைலமரக்காட்டில் கிழிந்த ஆடையுடன், உடலில் ஆங்காங்கே காயங்களுடன் சிறுமி மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர். இவரின் மகள் 8-ம் வகுப்பு மாணவி. குடிநீர் எடுப்பதற்காக அருகே உள்ள குளத்துக்குத் தனியாகச் சென்றுள்ளார். குடிநீர் எடுக்கச் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாததால், சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் குளத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு அவரைக் காணவில்லை. இதையடுத்து, சிறுமி வழக்கமாகச் செல்லும் பல இடங்களிலும் தேடி அலைந்தனர். ஆனாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இறுதியாகக் குளத்துக்கு அருகே உள்ள தைலமரக்காட்டுக்குள் சிறுமியைத் தேடிச் சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தைலமரக்காட்டில் கிழிந்த ஆடையுடன், உடலில் ஆங்காங்கே காயங்களுடன் சிறுமி மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். உடனே இதுகுறித்து கந்தர்வக்கோட்டை போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

புதுக்கோட்டை சிறுமிக்கு நேர்ந்த துயரம்
மேலும், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். எஸ்.பி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, “மாணவி தண்ணீர் எடுக்கச் செல்லும்போது வழிமறிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில்தான் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர்தான் பாலியல் வன்கொடுமை செய்தாரா, இல்லை கூட்டாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது மருத்துவச் சான்றிதழ் வந்த பிறகுதான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர். கந்தர்வக்கோட்டைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Back to top button