பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசிய கரு.நாகராஜனுக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் கடும் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசிய கரு.நாகராஜனுக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் கடும் கண்டனம்!

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களைப் பற்றி ஊடக விவாதத்தில் அவதூறாகவும், வெறுக்கத்தக்க வகையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜனை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

இது குறித்து விமன் இந்தியா மூவ்மெண்டின்(விம்) மாநில பொதுச்செயலாளர் நஸீமா பானு வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்களவை உறுப்பினரான ஜோதிமணி அவர்கள் நேற்றைய தினம் (18.05.2020) நடைபெற்ற ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு இடம்பெயர் தொழிலாளர் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துப் பேசியுள்ளார். எதிர் தரப்பில் பேசிய பாஜகவைச் சேர்ந்த நாகராஜன் வாதத்தில் தக்க கருத்துக்களை முன்வைக்க முடியாமல், கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாமல் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி அவர்களை பெண் என்றும் பாராமல் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளாலும் அவரை அவமதிக்கக் கூடிய வகையில் பேசியுள்ளார். இந்த பேச்சினை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாக கண்டிப்பதோடு, சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் பா.ஜ.கவை விமர்சிப்பவர்களை ஆண்களாக இருந்தால் கொலை மிரட்டல் விடுப்பதும், பெண்களாக இருந்தால் அவர்கள் மீது பாலியல் ரீதியான மோசமான தகாத வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் தொடர்கின்றது.

ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜக உறுப்பினர் எஸ்.வி. சேகர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் மீது இதேபோல் ஒரு முறை சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாகச் சித்தரித்துப் பேசினர். தொடரும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மற்றும் பெண் சமூகத்திற்கு எதிரான விஷமப் பிரச்சாரங்களை பொதுத் தளங்களில் கலந்து கொள்ளக்கூடிய பேச்சாளர்களையும் கட்சி சார்ந்த நபர்களையும் தரக்குறைவாகப் பேசி வருவது தொடர்கிறது.

பெண்களுக்கு எதிரான மோசமான பிற்போக்குத் தனமான சிந்தனைகளை பாஜக உறுப்பினர்கள் கொண்டுள்ளார்கள். எனவே இதுபோன்று இனி நடைபெறாத வகையில் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரு.நாகராஜன் தான் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்று பேசுபவர்கள் மீது காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் ஊடக விவாதங்களில் இவரைப்போன்ற கருத்தை எதிர்க்கத் துணிவில்லாதவர்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Show More
Back to top button