பதவியில் எப்படியேனும் ஒட்டிக்கொள்ளும் ‘பாணபத்திர ஓணாண்டி’ மா.பாண்டியராஜன்: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடியை புகழ்ந்து பாடி கிடைத்த பதவியில் எப்படியேனும் ஒட்டிக் கொள்ளும் ‘பாணபத்திர ஓணாண்டியாக’ மா.பாண்டியராஜன் தன் வாழ்வை தொடரட்டும் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்றொரு கிராமத்துப் பழமொழி உண்டு. தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அறிவிக்கும் விசயத்தில் பத்திரிகையாளர்களிடம் உளறிக் கொட்டிவிட்டு, பின்பு திமுகவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர், கொஞ்ச நாட்களாக நவதுவாரங்களையும் அடக்கிக் கொண்டு தனது இந்தி வளர்ப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமைச்சர் பாண்டியராஜன் திடீரென திமுக தலைவரை விமர்சித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது ‘ராஜ விசுவாசத்தை’ எப்படியேனும் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார்

Advertisement

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடங்கிய நாள் முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது கண்ணசைவில் கட்சியின் முன்னணி செயல்வீரர்கள் துவங்கி கடைக்கோடித் தொண்டர்கள் வரைக் களத்தில் இறங்கி மக்களின் துயர்துடைக்க அனுதினமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். திமுகவுக்கு மக்களிடையே எற்பட்டிருக்கும் பெரும் செல்வாக்கையும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் கண்டு அமைச்சர் பாண்டியராஜன் தனது ‘காந்தாரி மனம்’ பதறுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளட்டும்.

அதைச் செய்ய மனமில்லாவிட்டால் அனவரதமும் எடப்பாடியை புகழ்ந்து பாடி கிடைத்த பதவியில் எப்படியேனும் ஒட்டிக் கொள்ளும் ‘பாணபத்திர ஓணாண்டியாக’ தன் வாழ்வை தொடரட்டும். மாறாக எஃகு கோட்டையான திமுகவை விமர்சித்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Show More
Back to top button