டாஸ்மாக் கடை பகுதியில் அனுமதியின்றி டிரோன் பயன்படுத்திய 5 பேர் கைது: கார் பறிமுதல்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் டாஸ்மாக் கடையில் மதுவாங்க வரும் குடிமகன்களை படமெடுக்க அனுமதியின்றி ட்ரோன் கேமரா பயன்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் நாள்தோறும் மது வாங்க ஆயிரக்கணக்கான வரும் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. இவர்களை கட்டுப்படுத்தும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு மது வாங்க வரும் குடிமகன்களை படமெடுக்க அதிநவீன ட்ரோன் கேமரா என கூறப்படும் பறக்கும் கேமராவை பயன்படுத்தி சில இளைஞர்கள் படம் எடுத்து வந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி இந்த ட்ரோன் கேமராவை பயன்படுத்தி படம் பிடித்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார் . விசாரணையில் அந்த 5 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். உடனே வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் உசேன்(29) பாலாஜி(21) சரண்(23) லிங்கேஸ்வரன்(28) ராஜாமணி(30) என்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர்கள் முறையான அனுமதியின்றி மக்கள் கூடும் இடங்களை படம் பிடித்தது தெரியவந்தது. மேலும் ஒரே காரில் 5 பேரும் கூட்டாக அமர்ந்து வந்ததால் அந்த காரையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்